ஈழவழநாட்டின் உத்தரபாகத்திலே யாழ்ப்பாண நகரத்தின் மேற்றிசைக்கண் பண்டுதொட்டு பலவகைச் சிறப்புடனும், நீர்வளம், நிலவளம் மலிந்தும், செஞ்சாலிகள் நிறையப் பெற்றதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே அமையப் பெற்றதுமாய் விளங்கும் அராலிக் கிராமத்தின் மத்தியிலே, வண்ணப்புரம் என்னும் இடத்தில் ஸ்ரீ அகண்டாகார நித்திய வியாபக சத்திய ஞானானந்த அனாதிமலமுத்த சுத்த சாட்குண்ணிய தத்துவாதீதராக விளங்கும் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்திருக்கிறது.
இத் தேவஸ்தானத்திலே விநாயகப் பெருமான், விஸ்வநாதேஸ்வரர், விசாலாட்சி அம்பாள், சதாசிவேஸ்வரர், கஜாவல்லி மகாவல்லி சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரர், தட்சணாமூர்த்தி, சந்தானகோபாலர், நவக்கிரக மூர்த்திகள், நந்தி பலிபீடம், வைரவர், சண்டேசுரர் முதலிய தெய்வாம்ச மூர்த்தங்கள் இற்றைக்குப் பல ஆண்டுகட்கு முன் பிரதிட்டை செய்யப்பெற்று அன்பர்கள், அடியார்கள் யாவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள்.